×

பிரான்சில் வாண வேடிக்கைகளுடன் ஒலிம்பிக் ஜோதிக்கு உற்சாக வரவேற்பு : மார்செய் நகர பொதுமேடையில் தீபம் ஏற்றி வைப்பு!!

பாரீஸ் : கிரீஸ் நாட்டில் இருந்து பாரீஸ் நாட்டின் மார்செய் துறைமுக நகருக்கு கொண்டு வரப்பட்ட ஒலிம்பிக் ஜோதிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. 33வது ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் ஜூலை 26ம் தேதி தொடங்க உள்ளது. ஆகஸ்ட் 11ம் தேதி வரை நடைபெறும் போட்டியில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 10,000த்திற்கும் அதிகமான வீரர்கள், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர். 2024 ஒலிம்பிக் போட்டிக்கான ஜோதி, கடந்த ஏப்ரல் மாதம் கிரீஸ் நாட்டில் உள்ள வரலாற்று புகழ் வாய்ந்த ஆடுகளமான ஒலிம்பியாவில் ஏற்றப்பட்டது. பின்னர் கிரீஸ் முழுவதும் கொண்டு செல்லப்பட்ட ஒலிம்பிக் ஜோதி, பிரான்ஸ் ஒலிம்பிக் ஒருங்கிணைப்புக் குழுவிடம் முறைப்படி ஒப்படைக்கப்பட்டது. அங்கிருந்து பில்லம் என்ற பாரம்பரியமிக்க 3 அடுக்கு பாய்மர படகு மூலமாக பிரான்சுக்கு கொண்டு வரப்பட்டது. 12 நாட்கள் கடல் பயணத்திற்கு பிறகு ஒலிம்பிக் ஜோதி பிரான்ஸின் மார்செய் நகரை வந்தடைந்தது.

ஏராளமான சிறிய படகுகள் புடைசூழ ஜோதியை சுமந்து வந்த பாய்மர படகு, விழாக்கோலம் பூண்டு இருந்த துறைமுகத்திற்குள் வந்தது. பின்னர் அணையாமல் கொண்டு வரப்பட்ட ஜோதி அடங்கிய விளக்கில் இருந்து ஒலிம்பிக் ஜோதி சுடர் மாற்றப்பட்டது. இதையடுத்து, ஒலிம்பிக் ஜோதிக்கு கண்கவர் வான வேடிக்கைகளுடன் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பிரான்ஸ் நாட்டின் ராணுவ விமானங்கள் வானத்தில் ஒலிம்பிக் வளையங்களை உருவாக்கியது பார்வையாளர்களை பெரிதும் கவர்ந்தது. சிவப்பு, வெள்ளை, நீல நிற வண்ணங்களை வெளிப்படுத்தியவாறு பறந்த விமானங்கள் வானில் சாகசம் செய்தன. பின்னர், 2012-ஆம் ஆண்டின் ஒலிம்பிக் நீச்சல் சாம்பியன் பிளாரென்ட், 2016ம் ஆண்டு ரியோ ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற பாரா ஓலிம்பிக் தடகள வீரர் நான்டெனின் ஆகியோர் ஒலிம்பிக் தீபத்தை எடுத்து வந்தனர். பின்னர், அதை மார்செய்லி நகரத்தில் பிறந்த இசை கலைஞர் ஜூல் என்பவரிடம் வழங்கினார். அவர், அங்கு திரண்டிருந்த ஏராளமான பொதுமக்கள் முன் ஒலிம்பிக் தீபத்தை ஏற்றினார். உற்சாகம் பொங்கிய இந்த விழாவில் பிரான்ஸ் அதிபர் மெக்ரான் குடும்பத்தினருடன் கலந்து கொண்டார்.

The post பிரான்சில் வாண வேடிக்கைகளுடன் ஒலிம்பிக் ஜோதிக்கு உற்சாக வரவேற்பு : மார்செய் நகர பொதுமேடையில் தீபம் ஏற்றி வைப்பு!! appeared first on Dinakaran.

Tags : Olympic ,France ,Marseille ,Paris ,Greece ,33rd Olympic Games ,
× RELATED 128 ஆண்டுகள் பழமையான கப்பலில் வந்தது...